ஷா ஆலம், ஜூன் 25- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த வாரம் ஐந்து தொகுதிகளில் நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் 196 பேருக்கு நோய்த் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை ஸ்ரீ செத்தியா மற்றும் தாமான் மேடான் தொகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 73 பேரும் கடந்த ஞாயிறன்று சுங்கை துவா, கோம்பாக் செத்தியா மற்றும் தாமன் டெம்ப்ளர் தொகுதிகளில் நடைபெற்ற சோதனையில் 123 பேரும் நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது என்று கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் நடந்த பரிசோதனையில் 1,267 பேரும் பத்து கேவ்சில் நடைபெற்ற சோதனையில் 1,435 பேரும் பங்கு கொண்டனர். இதன் வழி இவ்வியக்கங்களில் பங்கேற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 2,702 ஆகும் என்றார் அவர்.
மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணம் குறித்து வினவப்பட்ட போது, பலர் இரண்டாம் கட்ட சோதனையில் பங்கேற்றதும் தடுப்பூசியைப் பெறுவதில் சமுதாயத்தின் கவனம் தற்போது உள்ளதும் இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என்று அவர் பதிலளித்தார்.
பெரும்பாலோர் இரண்டாம் கட்ட சோதனையில் பங்கு கொண்டுள்ளதோடு தடுப்பூசியைப் பெறுவதில் அவர்கள் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பலர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.








