புத்ரா ஜெயா, ஏப் 30- தேசிய போலீஸ் படையின் புதிய தலைவராக துணை போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மே மாதம் 4ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
வரும் மே மாதம் 3ஆம் தேதியுடன் பணி ஒப்பந்தம் முடிவுக்கு வரும் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோருக்கு பதிலாக 13வது தேசிய போலீஸ் படைத் தலைவராக அக்ரில் சானி நியமனம் பெறுகிறார்.
போலீஸ் படை ஆணையத்தின் இணக்கத்தின் பேரில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் வழங்கிய ஆலோசினைக்கேற்ப மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அல்ஹாஜி அவர்கள் இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கியதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனடின் கூறினார்.
போலீஸ் துறையில் சேவைக்காலம் முடிவடையும் வரை அதாவது வரும் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வரை அக்ரில் சானி தேசிய போலீஸ் படைத் தலைவராக பொறுப்பு வகிப்பார் என்றும் அவர் கூறினார்.
பதவி நியமனக்கடிதத்தை டத்தோஸ்ரீ அக்ரில் சானியிடம் ஒப்படைக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் பிறந்த அக்ரில் சானி, வட மலேசிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் (நிர்வாகம்) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
1986ஆம் ஆண்டு உதவி சுப்ரிண்டெண்டனாக போலீஸ் துறையில் சேர்ந்த அவர், மாவட்ட, மாநில மற்றும் புக்கிட் அமான் தலைமையக நிலையில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.








