ஷா ஆலம், செப் 18- கடல் அலை தடுப்பு அணை உடைந்த காரணத்தால் மோரிப் கடற்கரை பகுதி சீரமைப்புப் பணிக்காக மூடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில இயக்கைப் பேரிடர் நிர்வாகப் பிரிவின் தலைவர் அகமது பைருஸ் முகமது யூசுப் கூறினார்.
தடுப்பணை உடைந்தது தொடர்பான தகவல் அதிகாலை மணி 6.50 அளவில் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்கள் அங்கு செல்லாவண்ணம் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் சொன்னார்.
சுமார் பத்து மீட்டர் நீளத்திற்கு அந்த தடுப்பணை உடைந்துள்ளது தொடக்க கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனால் கடல் நீர் கரைப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படவில்லை என்பதோடு கடலோரம் உள்ள குடியிருப்புகளுக்கும் பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.
எனினும், விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தவிர்க்க பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதோடு அதிகாரிகளின் ஆலோசனைகளையும் கேட்டு நடக்க வேண்டும என்று அவர் அறிவுறுத்தினார்.
பெரும் கடல் பெருக்கு அபாயம் காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை கடலோரங்களில் எவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கேட்டுக் கொண்டார்.
சிப்பாங், கோல லங்காட், கிள்ளான், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் எனக் கூறிய அவர், இப்பகுதியில் கடல் அலை 5.8 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் சொன்னார்.








