கோலாலம்பூர், செப் 10- பெண்மணி ஒருவரிடம் கைத்தொலைபேசியை கொள்ளையிட முயன்ற ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பதின்ம வயதினரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சுங்கை பீசி, கம்போங் மலேசியா ராயாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் நிகழ்ந்தது.
அந்தப் பெண் சாலையோரம் நின்று கொண்டிருந்து போது 16 வயது இளம் பெண் ஒருவர் அவரை அணுகி தன் தாயாரிடம் பேசுவதற்கு கைத்தொலைபேசியை இரவல் தருமாறு கேட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது மொக்சேன் முகமது ஜூன் கூறினார்.
அந்த பெண் தனது கைப்பேசியை எடுத்து எண்களை அழுத்திக் கொண்டிருந்த போது அந்த பதின்ம வயது பெண் திடீரென அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடியதாக அவர் சொன்னார்.
அருகிலுள்ள உணவகத்தில் இருந்த பொதுமக்கள் அந்த பெண்ணையும் அவரது மூன்று சகாக்களையும் துரத்திப் பிடித்து போலீல் ஒப்படைத்தாக அவர் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணும் 14 முதல் 17 வயது வரையிலான மூன்று இளைஞர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








