பெட்டாலிங் ஜெயா, செப் 1- சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைமையக நிலையிலான குற்றச் செயல் தடுப்பு நடவடிக்கையின் வாயிலாக மொத்தக் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஐந்து விழுக்காட்டு வரை குறைக்க மாநிலப் போலீஸ் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த நடவடிக்கை இன்று தொடங்கிச் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று மாநிலப் போலீஸ் தலைமையகத்தின் குற்றச் செயல் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்குத் துறை தலைவர் டத்தோ கே.குமரன் கூறினார்.
மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்டது முதல் மாநிலத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அண்மைய காலமாகச் சாலைக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அத்தகைய சம்பவங்கள் மீது இந்நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர். 
இது போன்ற கொள்ளைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மாநிலப் போலீஸார் இவ்விவகாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் இக்குற்றச்செயல் தடுப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.
போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாகக் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் தந்து உதவ வேண்டும் என்றும் டத்தோ குமரன் கேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச் செயல் தடுப்பு நடவடிக்கையில் பெட்டாலிங் ஜெயா, செர்டாங், காஜாங், அம்பாங் ஜெயா, கோம்பாக், சுங்கை பூலோ, ஷா ஆலம், வட கிள்ளான், தென் கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகங்களைச் சேர்ந்த 742 அதிகாரிகள் பங்கேற்பர் எனவும் அவர் சொன்னார்.








