ஷா ஆலம், ஜனவரி 18:
பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது என்றும் எதிர் வரும் 14-வது பொது தேர்தலில் மக்களின் பேராதரவோடு புத்ரா ஜெயாவை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது என்று வட மலேசிய பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை, அரசாங்கம் மற்றும் அனைத்துலக ஆய்வுகள் கல்லூரியின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர் அமாட் மார்த்தாடா முகமட் கூறினார்.
கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உடனான பழைய பகையை திறந்த மனதுடன் மன்னித்த சம்பவம் மக்கள் மனதில் பதிய வைத்த ஒன்று என்று விவரித்தார்.
" அரசியல் அகராதியில், இப்படிப்பட்ட நடவடிக்கை 'சாதகமான சூழ்நிலை ' என்று அழைக்கப்படும். ஒருமித்த கருத்தோடு பழைய பகையை மறந்து இலக்கை நோக்கி போராட்டத்திற்கு தயாராக உள்ளது சிறந்த நடவடிக்கை ஆகும். அன்வாரின் நடவடிக்கை மிக சுலபமான ஒன்று அல்ல. பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட ஆழமான முடிவாக கருதப்படுகிறது," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.









