ஷா ஆலம், மார்ச் 30: ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் (STR) இரண்டாம் கட்டப் பட்டுவாடா இன்று முதல் தொடங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிதாக 200,000 பயனாளிகளுக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்-களுக்கு மத்தியில், அதிக உதவி தேவைப்படும் மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய பயனாளிகள் சேர்க்கப் பட்டுள்ளதாக நிதி அமைச்சு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்த உதவி, பயனாளிகளின் நிதிச் சுமையைக் குறைத்து, குடும்பங்களுக்கு நிம்மதி அளிக்கும் என நம்புகிறோம். மடாணி அரசாங்கம், உதவி தேவைப்படும் மக்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் தகுதி நிலையைச் சரிபார்க்கவும், விவரங்களைப் புதுப்பிக்கவும் **bantuantunai.hasil.gov.my** என்ற அதிகாரப்-பூர்வ இணையதளத்தைப் பார்வையிட ஊக்கு விக்கப்படுகிறார்கள்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு உதவும் வகையில், STR இரண்டாம் கட்டப் பட்டுவாடா முன்கூட்டியே வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்தார்.
அறிவித்தபடி, இந்த இரண்டாம் கட்டப் பட்டுவாடா 5.2 மில்லியன் பயனாளிகளுக்கு ரிம1.3 பில்லியன் ஒதுக்கீட்டில் வழங்கப் படுகிறது. இதில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட 200,000 பயனாளிகளும் அடங்குவர்.
ஒட்டுமொத்தமாக, இந்த உதவி 3.8 மில்லியன் குடும்பங்களையும், 1.4 மில்லியன் துணையற்ற மூத்த குடிமக்களையும் சென்றடைகிறது. தகுதிக் கேற்ப ரிம 100 முதல் ரிம 600 வரையிலான தொகை வழங்கப்படும்.








