ஷா ஆலம், மார்ச் 29: பண்டமாரான் சட்டமன்றத் தொகுதியில், மூத்த குடிமக்களுக்கான மெஸ்ரா உசியா இமாஸ் (SMUE) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா (SMIS) திட்டங்களின் கீழ் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பிறந்த பங்கேற்பாளர்கள், தங்களது பற்றுச் சீட்டுகளை மார்ச் 31-ஆம் தேதிக்கு முன் பெற்றுக் கொள்ள நினைவூட்டப் படுகிறார்கள்.
தங்கள் தரப்பு நடத்திய ஆய்வில், இந்த இரு திட்டங்களின் கீழ் உள்ள பல பங்கேற்பாளர்கள் இன்னும் தங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெற வில்லை என்பதால், அவர்கள் இந்த வாய்ப்பை இழந்து விடுவார்களோ என்று கவலை கொள்வதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் டக் சீ கூறினார்.
"ஜனவரி மாதம் பிறந்த 152 பேர், பிப்ரவரியில் 153 பேர் மற்றும் மார்ச் மாதத்தில் 198 பேர் என இன்னும் பலர் தங்கள் பற்றுச்சீட்டுகளைப் பெறவில்லை. அவர்கள் அனைவரும் மார்ச் 31-ஆம் தேதிக்கு முன் பண்டமாரான் சட்டமன்ற சேவை மையத்தில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்," என்றார்."தயவுசெய்து உங்கள் குடும்பத்தில் உள்ள முதியவர்களின் தகுதியைச் சரிபார்க்கவும் அல்லது இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட நண்பர்களுக்குப் பரப்பவும்.
சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த நன்மைகளைப் பெறும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள்," என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்ய, மாநில அரசு இந்த ஆண்டு இரு திட்டங்களையும் தொடர்ந்து செயல் படுத்துகிறது.
முன்னதாக, SMUE மூலமான இறப்பு நிதியுதவி மே 2019-இல் நிறுத்தப்பட்டு, பின்னர் 2021-இல் மீண்டும் தொடங்கப்பட்டது. RM7.5 மில்லியன் ஒதுக்கீட்டில், தகுதியான வாரிசுகள் RM500 உதவி பெறுவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.




