புத்ராஜெயா, மார்ச் 26 - ஷா ஆலமில் இயங்கி வரும் உள்நாட்டு வருமான வரி அலுவலகம் (LHDN), எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஒரு புதிய வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளது.
ஷா ஆலம், பிரிவு 14, பெர்சியாரான் பண்டார் ராயாவில் அமைந்துள்ள 'மெனாரா ஹாஸில் ஷா ஆலம்' (Menara HASiL Shah Alam) கட்டிடத்திற்கு இந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிளாசா பெராங்சாங் (Plaza Perangsang) கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வருமான வரி அலுவலகம், இடமாற்றப் பணிகளுக்காக மார்ச் 30-ஆம் தேதியுடன் அங்குள்ள தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும். புதிய இடத்தில் ஏப்ரல் 1 முதல் பொதுமக்கள் தங்களின் வரி தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய அலுவலகத்தில் உள்ள சேவை கவுண்டர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். இங்கு உள்ளூர் சேவை கவுண்டர், முத்திரை வரி (Stamp Duty) கவுண்டர் மற்றும் அரசாங்கத்தின் சிறப்பு உதவிக்கான கவுண்டர் ஆகிய சேவைகள் பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
இது குறித்து மேல் விபரங்கள் அல்லது உதவி தேவைப்படும் பொதுமக்கள், 'ஹாஸில்' தொடர்பு மையத்தை (Hasil Contact Centre) 03-8911 1000 என்ற எண்ணில் அழைக்கலாம்.
வெளிநாடுகளிலிருந்து தொடர்புகொள்பவர்கள் +603-8911 1000 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம். இது தவிர, 'ஹாஸில்' அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் உள்ள நேரடி உதவி (Live Chat) வசதி அல்லது கருத்துப் படிவத்தின் மூலமாகவும் தங்கள் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.







