பண்டிகை காலம் என்றாலும் சமரசமில்லை: சட்டவிரோதக் குடியேறிகள் மீது அமலாக்க நடவடிக்கை தொடரும்

24 மார்ச் 2026, 8:26 AM
பண்டிகை காலம் என்றாலும் சமரசமில்லை: சட்டவிரோதக் குடியேறிகள் மீது அமலாக்க நடவடிக்கை தொடரும்

கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசியாவில் உள்ள வெளிநாட்டினர், குறிப்பாகச் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு (PATI) எதிரான அமலாக்க நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றித் தொடரும் என மலேசியக் குடிநுழைவுத் துறை (JIM) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்கள் உட்பட எந்தச் சூழலிலும் இந்த நடவடிக்கைகள் 'பருவகால நடவடிக்கையாக' இருக்காது என்றும், நாட்டின் சட்ட இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடு) டத்தோ லோக்மான் எபெண்டி ரம்லி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்ட திட்டங்களை வெளிநாட்டினர் உட்பட அனைத்துத் தரப்பினரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டினர் தங்களின் பண்டிகைகளை அமைதியான முறையில் கொண்டாடுவதை குடிநுழைவுத் துறை எப்போதும் மதிப்பதாகவும், அதே வேளையில் சட்டத்தின் முன்னுரிமையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஐடில்ஃபித்ரி விடுமுறை காலத்தின் போது, வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்களில் குடிநுழைவுத் துறை சோதனைகளை நடத்தியது குறித்துச் சில தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய டத்தோ லோக்மான் எபெண்டி, முறையான பயண ஆவணங்கள் மற்றும் விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் அச்சப்படத் தேவையில்லை மற்றும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர் உறுதி அளித்தார்.

பண்டிகைக் காலங்களில் கண்காணிப்புப் பணிகள் தளர்த்தப்படுவதைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில தரப்பினர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இத்தகையச் சூழலில் அமலாக்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டால், சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதோடு பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு அமலாக்க நடவடிக்கையும் மிகவும் கண்ணியத்துடனும், நேர்மையுடனும், அதே சமயம் உறுதியுடனும் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இத்தகையத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவே தவிர, எந்தவொரு தரப்பினருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கம் இதில் இல்லை என அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.