ஐடில்ஃபித்ரி பெருநாள் சிறப்புச் சோதனை: நாடு முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை

24 மார்ச் 2026, 4:09 AM
ஐடில்ஃபித்ரி பெருநாள் சிறப்புச் சோதனை: நாடு முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 24 – மலேசியப் போக்குவரத்துத் துறை (JPJ) மேற்கொண்டு வரும் '2026-ஆம் ஆண்டு ஐடில்ஃபித்ரி பெருநாள் காலச் சிறப்புச் சோதனையில்' (Ops HRA 2026), இதுவரை நாடு முழுவதும் 14,455 வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் மொத்தம் 172,479 வாகனங்கள் உட்படுத்தப்பட்டதாகத் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் டத்தோ எடி ஃபட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஈப்போவில் உள்ள மேரு மெனோரா சுரங்கப்பாதை கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், விதிமுறைகளை மீறியதாக இதுவரை 289 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதில், பெருநாள் காலங்களில் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை மீறிச் சென்ற 43 சரக்கு வாகனங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிறப்புச் சோதனையில் இதுவரை பதிவான விதிமீறல்களில், சீட் பெல்ட் எனப்படும் பாதுகாப்புப் பட்டையை அணியாதது தொடர்பாக 761 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியது தொடர்பாக 353 வழக்குகளும், போக்குவரத்துச் சமிக்ஞைகளை (Traffic signals) மதிக்காமல் சென்றது தொடர்பாக 317 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இவை இந்தச் சோதனையில் பதிவான முதல் மூன்று முக்கியக் குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது, போக்குவரத்துத் துறை மூத்த அமலாக்கப் பணிப்பாளர் டத்தோ முகமது கிப்லி மா ஹசான், பேராக் மாநிலப் போக்குவரத்துத் துறை இயக்குநர் முகமது யூசோஃப் அபுஸ்தான் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

பெருநாள் காலங்களில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இத்தகையக் கடுமையான கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.