பூடி மடாணி RON95 மானிய முறைகேடு: சம்பந்தப்பட்டவர்களின் அடையாள அட்டையை முடக்க நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை

24 மார்ச் 2026, 12:58 AM
பூடி மடாணி RON95 மானிய முறைகேடு: சம்பந்தப்பட்டவர்களின் அடையாள அட்டையை முடக்க நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 24 – மலேசிய அரசாங்கத்தின் பூடி மடாணி RON95 (BUDI95) மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தும் தனிநபர்களுக்கு எதிராக நிதி அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதில் குறிப்பாக, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொளிகளில் காணப்படுவது போல, மானிய விலையிலான பெட்ரோலை வாகனங்களுக்குப் பயன்படுத்தாமல், கொள்கலன்கள் அல்லது காலிப் பீப்பாய்களில் நிரப்பும் நபர்களின் அடையாள அட்டைகள் (MyKad) உடனடியாக முடக்கப்படும் என நிதி அமைச்சு எச்சரித்துள்ளது.

சமீபத்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் இரண்டு நபர்கள் தங்களின் காரின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பெரிய கொள்கலனில் RON95 பெட்ரோலை நிரப்பும் காட்சி இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணை நடத்திய நிதி அமைச்சு, சம்பந்தப்பட்ட நபர்கள் மலேசியப் பிரஜைகள் என்பதையும், அவர்கள் மைக்காட் உரிமையாளர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, அந்த பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டையைத் தற்காலிகமாக முடக்குவதோடு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் இனிவரும் காலங்களில் BUDI95 மானியத்தைப் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த மானியத் திட்டமானது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் தலைமையிலான நிதி அமைச்சு உறுதியாக உள்ளது. தற்போதையச் சூழலில் எரிபொருள் விலை மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும்.

இத்தகையச் சூழலில், வெளிப்படையான மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய முறையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் எவரையும் அரசாங்கம் மன்னிக்காது என்றும், இத்தகைய முறைகேடுகள் குறித்து எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்றும் அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

பொதுமக்கள் இது போன்ற சட்டவிரோதச் செயல்களைக் கண்டால் உடனடியாகப் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூகப் பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்கும் மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நிதி அமைச்சு, இத்தகையப் பொறுப்பற்றச் செயல்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

இது தொடர்பான புகார்களை அளிக்க விரும்புவோர் 1300-88-9595 என்ற BUDI MADANI சேவை மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது +603-26314595 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், budimadani@treasury.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தங்களின் புகார்களை அனுப்பலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.