கோலாலம்பூர், மார்ச் 4- சன்வே (Sunway) நிறுவனம் ஐஜேஎம் (IJM) கார்ப்பரேஷனைப் பொறுப்பேற்கும் முன்மொழிவு குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 2.5 பில்லியன் ரிங்கிட் முதலீடு தொடர்பான பணமோசடிப் புகார்கள் குறித்து எஸ்பிஆர்எம் மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் இணைந்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பாக ஐஜேஎம் தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை இன்னும் நீண்ட காலம் தொடரும் என அதன் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்
.அரசுத் தொடர்பு நிறுவனங்கள் ஐஜேஎம்மில் பங்குதாரர்களாக இருப்பதால், பொதுமக்களின் நிதி சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் ஊழல் அல்லது முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி 12-ஆம் தேதி ஐஜேஎம் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளை சுமார் 11 பில்லியன் ரிங்கிட்டிற்கு கையகப்படுத்த சன்வே நிறுவனம் முன்வைத்த நிபந்தனையுடனான சலுகையைத் தொடர்ந்து இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தங்கள் மீதான பணமோசடிப் புகார்களை ஐஜேஎம் நிறுவனம் முற்றாக மறுத்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் இணக்கம் எட்டப்படாவிட்டால் இந்த வணிக ஒப்பந்தத்திலிருந்து விலகத் தயார் என சன்வே தலைவர் ஜெப்ரி சீ அறிவித்துள்ளார்.








