கோலாலம்பூர், மார்ச் 4- சமூக வலைதளங்களில் பரவி வருவது போல, MyNIISe செயலியைப் பயன்படுத்துவது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றும் இதற்கான அதிகாரப்பூர்வத் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு (KDN) தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போதுள்ள குடிநுழைவுச் சோதனைகளுக்கான பல்வேறு முறைகளை அரசாங்கம் இன்னும் பராமரித்து வருவதால், இந்தச் செயலியைப் பயன்படுத்துவது அனைத்துப் பயனர்களுக்கும் கட்டாயமல்ல என்று உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் நுழைபவர்களின் தேவைக்கேற்ப, கடவுச்சீட்டு (Passport) மூலம் குடிநுழைவுச் சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் 'Autogate' வசதி போன்ற தற்போதைய நடைமுறைகளே தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் விளக்கமளித்தார்.
முக்கிய நுழைவாயில்களில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் ஒரு தற்காலிக முயற்சியாகவே 'My Border Pass' செயலி தற்போது சோதனை முறையில் (Proof of Concept) செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பின் (MyNIISe) ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, குடிநுழைவுத் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதையும் நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இது தொடர்பாக ஏதேனும் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டால், அது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் அமைச்சின் வாயிலாக பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.








