ஷா ஆலாம், பிப் 27- உலு சிலாங்கூர், ஃபெல்டா சுங்கை திங்கி ரமலான் சந்தையில் நடைபெற்ற ‘பஜார் சந்திப்பு மற்றும் நோன்புக் கஞ்சி விநியோகத் திட்டத்தின்’ கீழ், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 1,000 கஞ்சி மற்றும் பேரீச்சம்பழப் பொட்டலங்களை வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் விநியோகித்தார்.
இந்த நிகழ்வில் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரிசாம் இஸ்மாயிலுடன் கலந்துகொண்ட மந்திரி புசார், அங்குள்ள துறைத் தலைவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியதோடு, சிறுவர்களுக்குப் பெருநாள் பணத்தையும் வழங்கி மகிழ்வித்தார்.
உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத் (MPHS) தலைவர் மற்றும் முக்கியப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், வருகையாளர்கள் மந்திரி புசாருடன் கைகுலுக்கியும் சுயப்படம் எடுத்தும் உற்சாகமாகத் தங்களின் வரவேற்பை வெளிப்படுத்தினர்.
அதே வேளையில், பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் (PLATS) நிறுவனம் அங்குள்ள சிறு தொழில் முனைவோரை ‘கோ டிஜிட்டல்’ திட்டத்தில் இணைப்பதற்கான சிறப்புப் பதிவு மையத்தையும் அந்த பஜாரிலேயே திறந்திருந்தது.
சிலாங்கூர் சுல்தானின் ‘இஹ்யா ரமலான்’ முயற்சியின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 11 இடங்களில் மொத்தம் 11,000 நோன்புக் கஞ்சி பொட்டலங்களை வழங்கும் இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி பிகேஎன்எஸ் சந்தை முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
கிராமப்புற மேம்பாடு மற்றும் ஒற்றுமை இலக்குகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், ரமலான் மாதம் முழுவதும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்குப் பயன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன








