கோலாலம்பூர், பிப் 27- மலேசியாவில் தொழில்நுட்ப மையமான கூகிளின் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதைத், தொடர்பு அமைச்சும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் (MCMC) தொடர்ந்து எளிதாக்கும்.
பாதுகாப்பான தரவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தாக்கத்திற்கான பிராந்திய மையமாக மலேசியாவின் இலக்கை வலுப்படுத்தும் வகையில், உள்கட்டமைப்பு தயார்நிலை மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் இதில் அடங்கும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
"இந்த முதலீட்டில் மலேசியாவின் முதல் கூகிள் தரவு மையம் மற்றும் கிளவுட் சேவைகள் அடங்கும். இது 2030-ஆம் ஆண்டுக்குள் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத் தாக்கத்தையும், 26,500 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் அவர்.
"டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய இடமாக மலேசியா தொடர்ந்து நம்பப்படுகிறது," என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கூகிள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான ரூத் போரட் மற்றும் அவரது குழுவினருடன் இன்று காலை நடத்திய காணொளி சந்திப்பில் தானும் பங்கேற்ற சில புகைப்படங்களையும் காணொளியையும் ஃபஹ்மி பகிர்ந்திருந்தார்.
மே 2024-இல், கூகிள் மலேசியாவில் 9.4 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை அறிவித்தது. இதில் நாட்டின் முதல் தரவு மையம் மற்றும் கூகிள் கிளவுட் பிராந்தியம் அமைப்பது, உள்ளூர் மற்றும் உலகளாவிய கிளவுட் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வது, அத்துடன் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான AI எழுத்தறிவுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.








