கோலாலம்பூர், பிப். 27 – மலேசியாவிற்கு மீண்டும் அழைத்து வர உதவி வழங்கப்பட்ட போதிலும், தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் 13 மலேசியர்கள் இன்னும் ஈரானில் தங்க முடிவு செய்துள்ளதாக டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் மக்களவையில் தெரிவித்தார்.
அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
“அந்தக் கடிதத்தில், அவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்ட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், நாங்கள் அவர்களை மீண்டும் அழைத்து வர விரும்புகிறோம்; ஆனால் அவர்கள் தங்களது சொந்த விருப்பத்தால் திரும்ப வர விரும்பவில்லை,” என்று அவர் மக்களவையில் நடைபெற்ற அமைச்சர்களின் கேள்வி நேர அமர்வின் போது தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 18ஆம் தேதி, தெஹ்ரானில் உள்ள மலேசிய தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும், பிப்ரவரி 2ஆம் தேதி மலேசிய தூதர் உள்ளிட்ட அதிகாரிகளையும் அரசாங்கம் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்தது.
— பெர்னாமா








