பகாங்கில் வழிபாட்டு தலங்களை நிர்மாணிக்கும் போது சட்டத்திட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்- பகாங் சுல்தான் கருத்து 

25 பிப்ரவரி 2026, 8:40 AM
பகாங்கில் வழிபாட்டு தலங்களை நிர்மாணிக்கும் போது சட்டத்திட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்- பகாங் சுல்தான் கருத்து 

குவாந்தான். பிப் 25 - பகாங் மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், அம்மாநிலத்தில் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயம் என்று பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அகமது ஷா வலியுறுத்தியுள்ளார்.

சரியான வழிமுறைகளைப் பின்பற்றாமல் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது சட்டமீறல் மட்டுமன்றி, பல்லின மக்களிடையே தவறான புரிதல்களையும் மத மற்றும் இன ரீதியான பதற்றத்தையும் உருவாக்கக்கூடும் என்று மாட்சிமை தங்கிய சுல்தான் சுட்டிக்காட்டினார்.

சட்டங்கள் என்பது யாரையும் ஒடுக்குவதற்காகவோ அல்லது தடுப்பதற்காகவோ அல்ல, மாறாக நீதியையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தி அனைத்தையும் முறைப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டவை என்று பகாங் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தெமர்லோ, தாமான் புக்கிட் பெண்டேராவில் உள்ள தெங்கு அமீர் இப்ராஹிம் சுல்தான் அப்துல்லா மசூதியைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே சுல்தான் இந்த முக்கியக் கருத்தை முன்வைத்தார்.

விதிமுறைகளை மீறிச் செயல்படுவது சமூகத்தில் குழப்பத்தையும் மோதல்களையும் விளைவிக்கும் என்பதை 'முறையான வரைபடம் இன்றி கட்டப்படும் வீடு இறுதியில் இடிந்து விழுவதற்குச் சமம்' எனும் உதாரணத்தின் மூலம் அவர் விளக்கினார்.

அதிகாரிகள், உள்ளூர் நிருவாகங்கள், இஸ்லாமிய சமயத் துறை மற்றும் சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்களுக்கான நடைமுறைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, மாநிலத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க மக்கள் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.