உலு லங்காட், செமினியில் பள்ளி நெரிசலைக் குறைக்க புதிய இடைநிலைப்பள்ளிகள்: கல்வி அமைச்சு திட்டம்

25 பிப்ரவரி 2026, 8:11 AM
உலு லங்காட், செமினியில் பள்ளி நெரிசலைக் குறைக்க புதிய இடைநிலைப்பள்ளிகள்: கல்வி அமைச்சு திட்டம்

செமினி, பிப் 25 - உலு லங்காட், பெக்கான் பத்து 18 மற்றும் செமினி பகுதிகளில் நிலவும் மாணவர் நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புதிய இடைநிலைப்பள்ளிகளைக் கட்ட மலேசியக் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்ஸான் எழுப்பிய கேள்விக்கு நேற்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சர், இப்பகுதிகளில் உள்ள இடைநிலைப்பள்ளிகள் அனைத்தும் தற்போது இரு அமர்வுகளாக இயங்குவதோடு மாணவர் எண்ணிக்கையும் கொள்ளளவைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பெக்கான் பத்து 18-இல் நிலவும் நெரிசலைக் குறைக்க ஒரு புதிய பள்ளி அவசரமாகத் தேவைப்படுவதால், அதற்கான பொருத்தமான நிலத்தை அடையாளம் காணும் பணிகளில் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தற்போது ஈடுபட்டுள்ளது.

குறுகிய கால நடவடிக்கையாக, SMK டூசுன் நண்டிங் பள்ளியில் தொழிற்துறை கட்டிட அமைப்பு (IBS) முறையில் மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்தார்.

செமினி பகுதியில் மாணவர் எண்ணிக்கையைச் சீர்செய்யும் நோக்கில், 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் SMK ஈக்கோ மெஜஸ்டிக் பள்ளிக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைச்சு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

அத்துடன், பண்டார் சன்வே செமினியில் புதிய பள்ளியைக் கட்டுவதற்கு மேம்பாட்டாளர் வழங்கிய நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நில உரிமை விவகாரங்கள் முடிந்தவுடன் 13-வது மலேசியத் திட்டத்தின் கீழ் கட்டுமான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.