புக்கிட் காயூ ஈத்தாம், பிப் 25: மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் புக்கிட் காயூ ஈத்தாம் தளபதி, சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் (SAC) முகமட் நசாருடின் முகமட் நாசிர் பயணம் செய்த வாகனம் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் அதிகாலை 5.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கெடா மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அதிகாரி தொழுகைக்காக மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில், வாகனத்தின் பின்வலது கதவு மற்றும் முன் பயணி இருக்கைப் பகுதியில் தோட்டாக்கள் பாய்ந்தன. இருப்பினும், அந்த அதிகாரிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
தாக்குதலைத் தொடர்ந்து, தனியாக வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அந்த அதிகாரி சந்தேக நபர்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்றார். ஆனால், அவர்கள் அருகில் உள்ள ஒரு தொழில்பேட்டை பகுதிக்குள் நுழைந்து தப்பிச் சென்றனர். பின்னர் அவர் தனது புரோட்டான் X70 ரக வாகனத்துடன் குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
இந்தத் தாக்குதல் எல்லைப் பகுதியில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் கடத்தல் கும்பல்களின் அதிருப்தியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களில் புக்கிட் காயூ ஈத்தாம் பாதுகாப்பு முகமை, 100 டன் அரிசி மற்றும் பன்றி இறைச்சி கடத்தல்களை முறியடித்துப் பெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன், எல்லை வழியாக ஊடுருவிய சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் கடத்தல்காரர்கள் பலரைக் கைது செய்துள்ளதும் இந்தக் கும்பல்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று டத்தோ அட்லி தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக 1971-ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







