கோலாலம்பூர், பிப் 25: காசநோய் பாதிப்பைக் கண்டறிய பொதுமக்கள் முன்கூட்டியே பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்பதோடு உடல் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரத் துணை இயக்குநர் டாக்டர் இஸ்முனி பொஹாரி, காசநோயிலிருந்து முழுமையாகக் குணமடையவும், சமூகத்தில் அதன் பரவலைத் தடுக்கவும் முன்கூட்டியே சிகிச்சைப் பெறுவதே மிக முக்கியமான தீர்வாகும் என்று தெரிவித்தார்.
மலேசியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் காசநோய் பாதிப்பு விகிதம் ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் 61 முதல் 80 வரை என்ற அளவில் நிலையாக இருந்தாலும், பொதுமக்கள் இது குறித்து மெத்தனமாக இருக்கக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
சாத்தியமான நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விரைவாகச் சிகிச்சையளிப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட டாக்டர் இஸ்முனி, இதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்க முடியும் என்றார். குறிப்பாக, புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல், சுறுசுறுப்பாக இருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஆரம்பக்காலப் பாதுகாப்பாக பிசிஜி (BCG) தடுப்பூசியைச் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அறிகுறி உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்றும், குறிப்பாக குறுகிய இடங்களுக்குச் செல்வதற்கு முன் பரிசோதனை செய்துகொள்வது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள மற்றவர்களைப் பாதுகாக்க உதவும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மறைந்திருக்கும் காசநோய்' (Latent TB) குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையின் சுவாசச் சிகிச்சை நிபுணர் டத்தோ டாக்டர் மாட் ஸுக்கி மாட் ஜேப், கூறினார். கிருமிகள் உடலில் பல ஆண்டுகளாக அறிகுறிகள் காட்டாமல் இருக்கலாம் என்றும், வயது முதிர்வு, நீரிழிவு நோய் அல்லது சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் பலவீனமடையும் போது அவை தீவிரமடையக்கூடும் என்றும் அவர் விளக்கினார். காசநோய் என்பது வெறும் இருமல் மட்டுமல்ல, அது மூளை உள்ளிட்ட மற்ற உறுப்புகளையும் தாக்கி உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தோல் பரிசோதனை அல்லது இரத்தப் பரிசோதனை மூலம் அதைக் கண்டறிவது அவசியம் என்றார்.
காசநோய்க்கான சிகிச்சைகள் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றன என்றும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சரியாக உட்கொண்டால் இந்நோயிலிருந்து முற்றிலும் குணமடையலாம் என்றும் அவர் உறுதியளித்தார். இருப்பினும், நோயாளிகள் குணமடைந்ததாக உணர்ந்தாலும் தன்னிச்சையாக மருந்துகளை நிறுத்தக்கூடாது என்று அவர் எச்சரித்தார். அவ்வாறு செய்வது கிருமிகள் மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலையை உருவாக்கும் என்றும், அத்தகைய சூழலில் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமானதோடு நீண்ட காலம் எடுக்கும் என்றும் அவர் பொதுமக்களை நினைவுறுத்தினார்.






