கோலாலம்பூர், பிப் 25: ரமலான் மாதத்தின் தொடக்கத்தில் கிளானா ஜெயா வழித்தட இலகு இரயில் சேவையில் ஏற்பட்ட தொடர் இடையூறுகள் குறித்து விசாரணை நடத்துமாறு நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் செயல்பாட்டுக் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பிரசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இது குறித்துத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரமலான் தொடக்கத்தில் நிகழ்ந்த இந்தச் சேவைத் தடங்கல்களைத் தாம் மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாகவும், மக்கள் மிகவும் திறமையான மற்றும் நம்பகமான போக்குவரத்துச் சேவையைப் பெற உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாகப் பிரசரானா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அமீர் ஹம்தான், அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய சந்திப்பில் விளக்கமளிக்க வேண்டும் என்றும், உடனடி சீரமைப்புத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கிளானா ஜெயா வழித்தட இலகு இரயில் சேவையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. நேற்று காலை நிகழ்ந்த சமீபத்திய இடையூறு காரணமாகப் பெரும்பாலான இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு, வழக்கத்திற்கு மாறான கடுமையான நெரிசலும் ஏற்பட்டது.






