கிள்ளான் பள்ளத்தாக்கு எல்.ஆர்.டி சேவையில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி

24 பிப்ரவரி 2026, 8:22 AM
கிள்ளான் பள்ளத்தாக்கு எல்.ஆர்.டி சேவையில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி

கோலாலம்பூர், பிப் 24 - இன்று காலை உச்சகட்ட நேரத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கிளானா ஜெயா எல்.ஆர்.டி (LRT) ரயில் தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

காலை சுமார் 8.00 மணியளவில் ஆசியா ஜெயா மற்றும் தாமான் பகாகியா நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்தச் சிக்கலால் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் அறிவித்தது.

ஒரு ரயிலில் ஏற்பட்ட சிஸ்டம் கோளாறு காரணமாக அந்த ரயில் கைமுறையாக (Manual) இயக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அனைத்து ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதோடு நிலையங்களில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டன.

இந்தச் சூழலைச் சீர்செய்ய 8.30 மணியளவில் ரேபிட் கேஎல் மாற்று ரயில் சேவைகளைத் தொடங்கியதுடன், கோம்பாக் மற்றும் புத்ரா ஹைட்ஸ் நிலையங்களிலிருந்து வந்த ரயில்களைப் பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கு முன்பே திருப்பி அனுப்பி கூட்ட நெரிசலைக் குறைக்க முற்பட்டது.

சுமார் 90 நிமிட போராட்டத்திற்குப் பிறகு பழுதடைந்த ரயில் வெற்றிகரமாக அகற்றப்பட்டு சேவைகள் சீராகத் தொடங்கிய நிலையில், விடுபட்ட பயணிகளின் கூட்டத்தை முழுமையாகக் குறைக்கச் சற்று கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்பாராத இடையூறுக்காக ரேபிட் கேஎல் நிறுவனம் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, உடனுக்குடனான தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தங்களின் அதிகாரப்பூர்வச் சமூக வலைதளங்களைப் பின்பற்றுமாறு பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.