புத்ராஜெயா, பிப் 24 – 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் மலேசியாவில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 54.7 விழுக்காடு குறைந்துள்ளது என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
அதாவது கடந்த ஆண்டில் 55,399 டிங்கி சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன; இந்த எண்ணிக்கை 2024-ஆம் ஆண்டில் 122,423 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிங்கியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் 59.8 விழுக்காடு குறைந்துள்ளது என தேசிய சுகாதார அமைச்சரவைக் குழுவின் (JKKN) தலைவருமான அஹ்ட் சாஹிட் குறிப்பிட்டார். 2024-இல் 117 மரணங்கள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு 47 மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
"இந்த சாதனை மகிழ்ச்சியளித்தாலும், அரசாங்க அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள், தனியார் துறை மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாண்டு மீண்டும் டிங்கி சம்பவங்கள் அதிகரிக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும்," என்று அவர் தலைமை தாங்கிய 2026-ஆம் ஆண்டின் முதல் JKKN கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 'டிங்கி இல்லா சமூகம்' (KomBeD) எனும் முயற்சியைச் சுகாதார அமைச்சு (KKM) செயல்படுத்தும். இது சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக ஈடுபாட்டை வலுப்படுத்துதல் மற்றும் பூச்சியியல் தலையீடு ஆகிய மூன்று முக்கிய உத்திகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஏடிஸ் கொசுக்கள் பெருகும் இடங்களைத் தடுக்க, அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களிலும் பொதுப்பணித் துறையின் (JKR) கட்டட வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு நடைமுறைகள் குறித்த திருத்தக் குறிப்புக்கு இணங்க வேண்டியதன் அவசியத்தையும் இக்கூட்டம் வலியுறுத்தியதாக சாஹிட் கூறினார்.
மலேசிய நல்வாழ்வு தேசிய செயல்திட்டம் (ANMS), டிங்கி மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான மூன்று முக்கிய குழுக்களை ஒரே மூலோபாய நிர்வாகத்தின் கீழ் ஒருங்கிணைத்து, நாட்டின் சுகாதார நிர்வாகத்தில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
"இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை, கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை ஒன்றுதிரட்டி, முழுமையான முறையில் மக்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான மடாணி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது," என்றார்.
ஆரோக்கியமான, வளமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க மலேசியாவை உருவாக்க, அனைத்து அரசாங்க மற்றும் தனியார் அமைப்புகளும் மக்களும் இந்த தேசிய செயல்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய ஒன்றிணைய வேண்டும் என்றும் அஹ்மட் சாஹிட் அழைப்பு விடுத்தார்.








