ஷா ஆலம், 23 பிப்: செக்சன் 7-இல் உள்ள மசூதி ஒன்றில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் நான்கு உள்ளூர் ஆண்களைப் போலீசார் தேடி வருகின்றனர். நேற்று காலை 10.36 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க மசூதி பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து இது குறித்த புகார் பெறப்பட்டதாக ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைமை உதவி ஆணையர் ரம்சே எம்போல் தெரிவித்தார்.
அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், சந்தேக நபர்கள் அனைவரும் 'டொயோட்டா அவான்சா' ரக காரில் வந்ததாகவும் நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மசூதியில் சுற்றுக்காவல் கேமரா (CCTV) பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மசூதி நிர்வாகத்திடமிருந்து அந்தப் பதிவுகளைப் பெறவுள்ளதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 380-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை உதவி அதிகாரி சார்ஜன் முகமட் மினாசுடின் முகமட் நூரை 013-2236697 என்ற எண்ணிலோ அல்லது ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தை 03-55202222 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







