புத்ராஜெயா, பிப் 14: வரவிருக்கும் சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் மாதத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் முட்டை, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் விநியோகம் சீராகவும் போதுமான அளவிலும் உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு (KPKM) தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் அதிக தேவை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், விநியோகத் தொடர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உற்பத்தி மூலங்களை நிர்வகிப்பதிலும் வலுப்படுத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"இந்த பண்டிகைக் காலங்களில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாட்டின் உணவுப் பொருட்கள் கையிருப்பு உகந்த அளவில் இருப்பதை உறுதி செய்வதில் KPKM உறுதியாக உள்ளது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2026 முதல் பிப்ரவரி 8 வரை, நாடு தழுவிய அளவில் மொத்தம் 478 அக்ரோ மடானி விற்பனைத் (JAM) திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை உள்ளூர் சந்தை விலையை விட 10 முதல் 30 விழுக்காடு வரை குறைந்த விலையில் மக்கள் வாங்கலாம் என்று KPKM கூறியது.
சீனப் புத்தாண்டு, ரமலான் மற்றும் நோன்புப் பெருநாளுக்கு முந்தைய காலக்கட்டத்தை (பிப்ரவரி மற்றும் மார்ச் 2026) முன்னிட்டு, கூட்டரசு விவசாய சந்தைப்படுத்தல் ஆணையம் (FAMA) நாடு முழுவதும் 572 JAM திட்டங்களை ஏற்பாடு செய்யவுள்ளது. அவற்றில், 430 திட்டங்கள் ஃபாமா சில்லறை விற்பனை நிலையங்களிலும், 142 திட்டங்கள் அரசாங்க வளாகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளிலும் நடத்தப்படும்.
"பண்டிகைக் காலம் மற்றும் ரமலான் மாதத்தில் நுகர்வோரின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த விற்பனையில் காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற தேவைகள் குறைந்த விலையில் விற்கப்படும். சந்தையில் விநியோகப் பற்றாக்குறை குறித்த கவலைகள் இன்றி, பண்டிகைக் காலங்களில் ஒவ்வொரு குடிமகனுக்கும் போதுமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்," என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.







