ஈப்போ, பிப். 14: நாடு முழுவதிலும் உள்ள தேசிய வகை சீன இடைநிலைப்பள்ளிகளின் (SMJKC) அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை மேம்படுத்துவதற்காகக் கூடுதலாக 20 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
நிதி அமைச்சருமான அன்வார், கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கும், மலேசியா மடாணி கொள்கைக்கு ஏற்ப பள்ளி வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாகக் கூறினார்.
"தேசிய வகை சீன இடைநிலைப்பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை மேம்படுத்தக் கூடுதலாக 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை நான் அறிவிக்கிறேன்," என்று அவர், ஈப்போவில் உள்ள யூக் சோய் தேசிய வகை சீன இடைநிலைப்பள்ளியில் (SMJK) நடைபெற்ற தம்புன் நாடாளுமன்றத் தொகுதி சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான் வரவேற்பு நிகழ்வான 'காசே மடாணி' அன்பளிப்பு வழங்கும் விழாவில் உரையாற்றியபோது தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமது உரையில், கல்வி முறைமையானது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை மட்டும் உருவாக்காமல், இனம் மற்றும் மதம் பாராமல் ஒழுக்கமாகவும், நற்பண்புகளுடனும், ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தும் மாணவர்களையும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
"நாம் பல்வேறு இனங்களையும் மதங்களையும் கொண்ட ஒரே நாடு. நாம் ஒருவரையொருவர் அறிந்து, மதிக்கக் கல்வி கற்பிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
அதே நிகழ்ச்சியில், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார், அப்பகுதியைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகளுக்கு நன்கொடைகளை வழங்கினார்.
தம்புன் நாடாளுமன்றத் தொகுதியைச் சுற்றியுள்ள சுமார் 3,000 மாணவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும், அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.







