சமய நெறியுடன் தைப்பூச திரு விழாவைக் கொண்டாடுங்கள்; மலேசிய இந்துக்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

1 பிப்ரவரி 2026, 3:43 AM
சமய நெறியுடன் தைப்பூச திரு விழாவைக் கொண்டாடுங்கள்; மலேசிய இந்துக்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 31: இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, மலேசிய இந்துக்கள் அனைவருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தைப்பூசம் என்பது தியாகம், ஞானம் மற்றும் ஆன்மீக வலிமை ஆகியவற்றின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் ஒரு புனிதமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது வாழ்த்துச் செய்தியில், "இந்த வழிபாட்டின் மூலம் வெளிப்படுத்தப்படும் பொறுமை, கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சி ஆகியவை சமூகத்தில் மதிக்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்பட வேண்டிய பண்புகளாகும்.

தைப்பூசக் கொண்டாட்டங்கள் அமைதியாகவும், நன்றியுணர்வுடனும், சமூக வாழ்வின் நெறிமுறைகளை மதிக்கும் வகையிலும் அமைய வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும், பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இத்தகைய மத மற்றும் கலாச்சார விழாக்கள் சுமுகமாகவும் ஒற்றுமையாகவும் கொண்டாடப் படுவது, மலேசியாவின் தனித்துவமான அடையாளத்தை மேலும் வலுப்படுத்துகிறது என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது மலேசியர்களுக்கு புதிய ஒன்றல்ல, அது நீண்ட காலமாக நமது வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "கொண்டாட்டங்கள் அனைத்து இந்துக்களுக்கும் மன அமைதியைத் தரட்டும். இந்தத் திருநாள் நமது பல்லினச் சமுதாயத்தில் பரஸ்பர மரியாதையையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வளர்க்க வழிவகுக்கட்டும்.

அனைவருக்கும் இனிய தைப்பூச நல்வாழ்த்துகள்," எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.