புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி 2- பினாங்கு மாநிலத்தில் குப்பைகளை வீசுவதற்கு எதிரான தூய்மை கேடு தடுப்புச் சட்டத்தை அடுத்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப் படும் என்று உள்ளூராட்சி, நகர மற்றும் கிராம திட்டமிடல் குழுத் தலைவர் எங் மூய் லாய் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள், பொதுக் கல்வி மற்றும் அமலாக்கம் ஆகியவற்றைச் செபராங் பிறை மாநகராட்சி மற்றும் பினாங்கு மாநகராட்சி ஆகியவை மேற்கொள்வதற்கு ஏதுவாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் ஆறு மாத கால ஒத்திவைப்புக்கு முடிவெடுக்கப் பட்டதாக கூறப்பட்டது.
"சம்மன் வழங்குவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய இரு மாநகராட்சிகளும் சிறப்புப் படைகளை அமைக்கும்," என்று பண்டார் பெர்டாவில் உள்ள எம்.பி.எஸ்.பி வளாகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ்.பி உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தெரிவித்தார்.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்பு சட்டம் 2007 (சட்டம் 672) உட்பட பல சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். முதல் தவறுக்கு RM2,000 வரை அபராதம் மற்றும் 12 மணி நேரம் வரை கட்டாய சமூக சேவை ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் குற்றம் புரிந்தவர்கள் சிறப்பு அங்கி அணிந்து பொது இடங்களைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிடப்படலாம். சமூக சேவை உத்தரவு அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறினால், அபராதத் தொகை அதிகபட்சமாக RM10,000 வரை அதிகரிக்கப்படும்.








