ஷா ஆலம், ஜன 23: கடந்த வருடம் சிலாங்கூர் மாநில அரசு நடத்திய சிலாங்கூர் ஜோப்கேர் கார்னிவல் மூலம் 1,618 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
இந்த வெற்றி, இத்திட்டத்தின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் சிலாங்கூர் மக்களின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்தும் திறனை நிரூபிக்கிறது.
“கடந்த ஆண்டு இத்திட்டத்தில் 40 நிறுவனங்கள் கலந்து கொண்டு 6,088 வேலை வாய்ப்புகளை வழங்கின. அதில் 1,308 பேர் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாவது நேர்முகத் தேர்வில் 211 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இரண்டாவது நேர்முகத் தேர்வில் 189 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் மொத்தம் 400 நபர்கள் வெற்றிகரமாக வேலை வாய்ப்பைப் பெற்றனர்,” என பாப்பாராய்டு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இத்திட்டம் மூன்று முக்கிய நிகழ்வுகளுடன் மேம்படுத்தப்படும் என்றார் அவர். அவை ஒன்பது மாவட்டங்களில் ஜோப்கேர், ஜேப்கேர் இஸ்திமேவா மற்றும் ஜோப்கேர் பிரிமியம் ஆகியவை ஆகும்.
இதில் ஏழ்மையில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஓராங் அஸ்லி மக்கள், முதியோர், முந்தைய குற்றவாளிகள், இல்லத்தரசிகள், தொழிலுக்கு திரும்பும் பெண்கள், வேலை இழந்தவர்கள் மற்றும் வீடு அற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.
முன்பு, 2026 ஜோப்கேர் திட்டத்தை சான்றிதழ் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உடன் மேம்படுத்தப்படும் என சிலாங்கூர் மந்திரி புசார் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில பட்ஜெட்டை முன்வைத்தபோது, வேலைவாய்ப்பு இல்லாதோரின் விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.


