ஷா ஆலம், ஜன 20 - இந்த ஆண்டு மலேசியாவில் பிப்ரவரி 1ஆம் திகதி தைப்பூசம் கொண்டாடப்படும். தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். அதில் காவல்துறையினரைப் பணிக்கு அமர்த்துவது, ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவை அடங்கும்.
இதற்கிடையில், பக்தர்களும் பொதுமக்களும் தங்களின் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்வதோடு தங்களின் குடும்பப் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். அதிக கூட்ட நெரிசலில் தங்களின் உடைமைகளையும் பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கூடுதலாக, இந்த தைப்பூசக் கொண்டாட்டத்தில் தங்களின் நேர்த்தி கடனை செலுத்துபவர்கள் நமது கலாச்சாரத்தைப் பின்பற்றி மிதமான போக்கைக் கடைபிடிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமில்லாமல், இது போன்ற கொண்டாட்டங்களில் இந்து சங்கத்தின் வழிகாட்டுதல்களும் மிகவும் முக்கியம் என பாப்பாராய்டு விளக்கினார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்களில் குப்பை தொடர்பான பிரச்சனைகள் அதிகம் எழுந்துள்ளன. தற்போது நம் நாட்டில் குப்பைகளால் எழும் பிரச்சனைகளைக் களைய அரசாங்கம் கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
எனவே, அதற்கு இணங்கும் வகையில் தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அனைவரும் கடந்த வருடங்கள் போல் இல்லாமல் இந்த வருடம் தூய்மைக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பாப்பாராய்டு அறிவுறுத்தினார். அதனால், குப்பைகளைக் கண்ட இடங்களில் போடாமல், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் வீசுமாறு நினைவூட்டப்பட்டுள்ளது.
மேலும், தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மது அருந்தாமல் இருக்க வேண்டும் என பாப்பாராய்டு கேட்டு கொண்டார். பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற பழக்கங்களை பின்பற்ற வேண்டாம் என அவர் கூறினார்.
இறுதியாக, இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தை நல்ல நெறிமுறைகளுடன் சிறப்பாகக் கொண்டாட வேண்டுகோள் விடுத்து, மலேசியாவில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது மனமார்ந்த தைப்பூச வாழ்த்தினை பாப்பாராய்டு தெரிவித்து கொண்டார்.


