பத்துமலை மின்படிக்கட்டு கட்டுமானத் திட்டத்தைத் தொடர மாநில அரசாங்கமும், கோயில் நிர்வாகமும் உடன்பாட்டை எட்டியுள்ளன

20 ஜனவரி 2026, 8:46 AM
பத்துமலை மின்படிக்கட்டு கட்டுமானத் திட்டத்தைத் தொடர மாநில அரசாங்கமும், கோயில் நிர்வாகமும் உடன்பாட்டை எட்டியுள்ளன

கோலாலம்பூர், ஜன 20: பத்து கேவ்ஸ் மின்படிக்கட்டு கட்டுமானத் திட்டத்தைத் தொடர மாநில அரசாங்கமும், பத்து கேவ்ஸ் கோயில் நிர்வாகமும் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன. ஆனால், திட்டம் செயல் படுத்தல் இன்னும் பல தொழில்நுட்ப அம்சங்களின் தீர்மானத்திற்கு உட்பட்டது ஆகும்.

இந்த திட்டத்தை நிர்மாணிப்பதற்கு முன்பு அனைத்து தொடர்புடைய விதிமுறைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக  ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

“இந்த கட்டுமான நோக்கத்திற்காக, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்,” என அவர் நேற்று தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகத்துடன் சந்திப்பு ஒன்றை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதற்கு முன், பத்துமலை கோயில் நிர்வாகத்துடன் அவர் சந்திப்பு நடத்தினார்.

டிஜிட்டல் அமைச்சரும், டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த், பத்து மலை  கோயிலின் தனித்துவமான நிலை காரணமாக இந்தப் பிரச்சனை எழுந்ததாகக் கூறினார். இது ஓர் அறக்கட்டளை அமைப்பை உள்ளடக்கிய பழைய நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது, இதனால் கட்டுமான விண்ணப்ப செயல்முறை வழக்கமான நடைமுறையிலிருந்து வேறுபட்டது.

மின்படிக்கட்டு கட்டுமானத்திற்கான விண்ணப்பம் தனிநபர் பெயரில் செய்யப் பட்டதாகக் கூறப்பட்டதிலிருந்து இந்த சர்ச்சை எழுந்தது. இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர், அந்த விண்ணப்பம் சம்பந்தப்பட்ட கோவிலின் நோக்கத்திற்காக நம்பிக்கை நிர்வாகியாக (trustee) செயல்படும் டான் ஸ்ரீ ஆர். நடராஜா மூலம், கோவில் நிர்வாகத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

"டான் ஸ்ரீ ஆர். நடராஜா தனது தனிப்பட்ட திறனில் விண்ணப்பம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது கோயில் தலைவர் என்ற முறையில், குறிப்பாக கோயில் குழுவின் அறங்காவலராக, அவர் விண்ணப்பித்துள்ளார்," என கோபிந்த் சிங் கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் வணிக பயன்பாட்டிற்கான தற்காலிக ஆக்கிரமிப்பு உரிமம் (LPS) விண்ணப்பத்தை, அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் நிராகரித்ததாக முன்னர் மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு தெரிவித்திருந்தார்.

சங்கப் பதிவுத் துறையில் (ROS) பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்க அனுமதிக்கும் தேசிய நிலக் குறியீட்டின் கீழ் நில விதிமுறைகளுக்கு முரணாக சங்கப் பதிவு இல்லாத ஒரு நபரின் பெயரில் மின் படிகட்டு திட்டத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப் பட்டதாகவும் பாப்பா ராய்டு விளக்கினார்.

"நான் செயல்முறையை எளிதாக்குவேன், இந்த விஷயத்தில் கோயிலுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பார்ப்பேன்" என்று கோபிந்த கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.