ஷா ஆலம், ஜன 20 - பள்ளி பேருந்து கட்டண உதவி என்பது சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகப் பிரித்தியேகமாக வகுக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் மூலம் B40 குடும்பங்களை சேர்ந்த இந்திய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், இந்த திட்டம் மாணவர்கள் குறைவாக இருக்கும் காரணத்தால் மூடப்படும் அபாயத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றவும் உதவுகிறது. இதன் மூலம், சிலாங்கூர் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக விளக்குகிறது என்றார் சிலாங்கூர் மாநில மனித வளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு.
இவ்வாண்டு பள்ளி பேருந்து கட்டண உதவிக்கு எதிர்வரும் 26 ஜனவரி தொடங்கி 13 பிப்ரவரி வரை விண்ணப்பிக்கலாம் என அவர் கூறினார்.
இத்திட்டத்திற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு நேரடியாகப் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியை கைவிட்டு விடாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு 12 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், உயர் கல்வியை தொடரும் மாணவர்களுக்கான கல்வி கட்டண உதவித் திட்டத்தின் விண்ணப்பம் மார்ச் 2 முதல் மார்ச் 13 வரை திறந்திருக்கும் என பாப்பாராய்டு சொன்னார். இந்த விண்ணப்பக் காலக்கட்டத்தில் மாணவர்கள், தேவைப்படும் ஆவணங்களை முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
அதுமட்டுமில்லாமல், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்லது கிராமத் தலைவர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்நடவடிக்கை, மாநில அரசால் வழங்கப்படும் உதவி சிலாங்கூரை சேர்ந்த மக்களை சென்றடைவதை உறுதி செய்கிறது என அவர் விளக்கினார்.
எனவே, உதவி தேவைப்படுவோர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இத்திட்டங்களுக்கு சரியான முறையில் விண்ணப்பிக்குமாறு பாப்பாராய்டு வேண்டுகோள் விடுத்தார்.



