ஷா ஆலம், ஜன 20 - இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதி, இரவு சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டம் பத்துமலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 60 இந்து ஆலயங்களுக்கு மானியம் வழங்குவது உட்பட பல சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
தைப்பூசத் தினத்திற்கு முதல் நாள் மாலை தொடங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் வழங்குதல் போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறும். இதில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உட்பட சிலாங்கூர் மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் பொதுமக்கள் குறிப்பாக இந்தியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வீ.பாப்பாராய்டு அழைப்பு விடுத்தார்.
தற்போது வரை, மானியத்திற்குக் கிட்டத்தட்ட 67 கோவில்கள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் முழு அளவில் தேவையான அனுமதி கடிதங்களை பரிசீலனை செய்த பிறகு குறைந்தது 60 கோவில்களுக்காவது மானியம் வழங்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மானியத்திற்கான மொத்த ஒதுக்கீடு 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் கோவிலுக்கான இரண்டாம் கட்ட மானியம் இவ்வாண்டு தீபாவளிக்கு முன் வழங்க முயற்சிப்பதாக பாப்பாராய்டு கூறினார். இந்த மானியம் அனைத்தும் முழுமையாக சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டு கெர்லிங்கில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திலும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என அவர் கூறினார்.


