கோலாலம்பூர், ஜன 19- 13ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK13) கீழ், நாட்டின் வீடமைப்புத் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் கட்டளையை வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் (KPKT) நெஞ்சார வரவேற்கிறது.
இது குறித்து கருத்துரைத்த அதன் அமைச்சர் யாப் நகா கோர் மிங், 12-ஆவது மலேசியத் திட்டத்தின் (RMK12) கீழ் சுமார் 500,000 குடியிருப்பு பிரிவுகளை நிர்மாணிப்பதில் அமைச்சகம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக RMK13-இல் கட்டுமானத்தின் தரத்தை அதிகரிப்பதில் அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறினார்.
"RMK13-இன் கீழ், கட்டப்படும் வீடுகள் உண்மையிலேயே தரமானதாக இருப்பதை உறுதிசெய்ய, கட்டுமானத் தரக் குறியீட்டை (score) உயர்த்த KPKT நடவடிக்கை எடுக்கும்.
இந்த இலக்கை அடைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். RMK13-க்கான இலக்குகளை எட்ட முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்," என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் வீடமைப்புத் துறை மிக முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்றும், அதில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் மாட்சிமை தங்கிய பேரரசர் அண்மையில் வலியுறுத்தியிருந்ததைத் தொடர்ந்து அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
மேலும், மலேசியாவின் வீடமைப்புத் துறையை உலகத் தரத்திற்கு இணையாகக் கொண்டு செல்வதற்கும், சர்வதேச அளவில் போட்டித்தன்மை மிக்கதாக மாற்றுவதற்கும் 'மடாணி' (MADANI) அரசாங்கம் தற்போது சரியான பாதையில் பயணித்து வருவதாகவும் நகா கோர் மிங் சுட்டிக்காட்டினார்.


