கோலாலம்பூர், ஜன 19 - கடந்த ஆண்டு தங்கும் விடுதி ஒன்றில் சில்டெனாபில் ரக மருந்தை வைந்திருந்த கூடுதல் குற்றச்சாட்டை, இன்று பிரபல பாடகர் நேம்வீ கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
அக்டோபர் 22ஆம் தேதி மாலை மணி 4.30 அளவில் கோலாலம்பூர் ஜாலான் கான்லேவில் உள்ள தங்கும்விடுதி அறையில் 0.78 கிராம் எடையிலான சில்டெனாபில் ரக மருந்தை வைந்திருந்ததாக 43 வயதான நேம்வீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 1952ஆம் ஆண்டு நச்சு சட்டம் செக்ஷன் 9 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதே சட்டம் செக்ஷன் 32 பிரிவின் (2) கீழ் அதிகபட்சம் RM50,000 அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மேலும், அதே இடம் தேதி மற்றும் நேரத்தில் 1.57 கிராம் எடையிலான மெத்தாம்பேட்டமைன் வகை போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்ஷன் 12 பிரிவு 3இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் RM100,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
முன்னதாக நீதிமன்றம் விதித்திருந்த ஜாமின் தொகை 2,000 ரிங்கிட்டை மாஜிஸ்திரேட் அதிகா முகமது சைம் நிலைநிறுத்தினார். இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பை மார்ச் ஐந்தாம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்


