அலோர் காஜா, ஜனவரி 18: மலேசிய ஆயுதப்படை வீரர்கள் மத்தியில் பரவி வரும் 'யேயே' (yeye) அல்லது களியாட்டக் கலாச்சாரம் தொடர்பான விவகாரத்தில், எவ்வித சமரசமுமின்றி கடுமையான உள்முறை நடைமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சு (MINDEF) விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய அனைத்துத் துறைகளின் கீழும் இதற்கென பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகத் பாதுகாப்பு அமைச்சின் துணை அமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்தார்.
"எங்கள் பாதுகாப்புத் துறையின் எந்தப் பிரிவிலும் ராணுவக் கலாச்சாரத்திற்கு முரணான எந்தவொரு செயலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அது ஒரு தனிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி, ஒழுக்க மீறல் நடந்தால் நாங்கள் உள்மட்டத்தில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும், தேவைப்பட்டால் அந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஒழுக்கக்கேடான செயல்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் 15 அதிகாரிகள் அல்லது வீரர்கள் மீதான விசாரணையின் போது, அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க அல்லது தற்காத்துக் கொள்ள முழு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதன் பின்னரே தண்டனை வழங்கப்படும் என்றும் அட்லி உறுதி அளித்தார்.
மேலும், இந்த ஒரு சம்பவத்திற்காக ஆயுதப்படை வீரர்களின் ஒட்டுமொத்த தியாகத்தையும் பொதுமக்கள் சந்தேகிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அவர்களின் பங்கு ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
"பாதுகாப்பு அமைச்சின் கீழ் 130,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். அதேபோல் சுமார் 300,000 முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காகத் தங்கள் நேரம், குடும்பம் மற்றும் சில நேரங்களில் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் வைரலான "யேயே" கலாச்சாரம் தொடர்பான ஒழுக்கக்கேடான செயல்களில் 15 ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை ராணுவத் தளபதி ஜெனரல் டத்தோ அஸ்ஹான் முகமட் ஒஸ்மான் நேற்று உறுதிப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


