அம்பாங் ஜெயா, ஜனவரி 18: வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பழங்குடியினர் தினக் கொண்டாட்டத்தின் இடமாக உலு சிலாங்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் செரண்டா மற்றும் சிப்பாங் பகுதிகளுக்குப் பிறகு, சிலாங்கூர் இக்கொண்டாட்டத்தை நடத்துவது இது மூன்றாவது முறையாகும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்டமானது மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின சமூகப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். "வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலகப் பழங்குடியினர் தினத்தை உலு சிலாங்கூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். சிலாங்கூரில் 74 கிராமங்களைச் சேர்ந்த 23,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்குச் சுற்றுலாத் துறையில் மட்டுமின்றி, கல்வித் துறையிலும் நாம் வாய்ப்புகளை வழங்க வேண்டும்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று இரவு டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வை மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தைப் பொதுமக்களிடையே கொண்டு செல்வதே இக்கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று பப்பாராயுடு கூறினார். "இது முக்கியமாகக் கலாச்சாரக் கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும். இன்னும் பலருக்குப் பழங்குடியின சமூகத்தைப் பற்றித் தெரியவில்லை, எனவே அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். அதன் மூலம் நமது இளைஞர்கள் அவர்களைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.


