அம்பாங் ஜெயா, ஜனவரி 18- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 160,000-க்கும் மேற்பட்ட படிவம் நான்கு மற்றும் படிவம் ஐந்து மாணவர்கள், இந்த ஆண்டு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டிலான 'சிலாங்கூர் மக்கள் இலவச கல்வித் திட்டத்தின்' (PTRS) கீழ் பயன் பெறுகின்றனர்.
கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தின் தேசிய சராசரி தரப்புள்ளி (GPN) உயர்வதற்கு இத்திட்டம் முக்கியப் பங்காற்றியதாக மந்திரி புசார் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 200,000 ஆக உயர்த்துவதைச் சிலாங்கூர் அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"இதற்கு முன்னதாக, 2008 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில், சுமார் 5,000 முதல் 6,000 மாணவர்கள் மட்டுமே மக்கள் கல்வித் திட்டத்தில் இணைந்திருந்தனர். "2018 முதல், சிலாங்கூர் மாநில கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நாங்கள் வலுப்படுத்தினோம். இன்று, மதிய உணவு ஆதரவுடன் 160,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நன்மையைத் விரிவுபடுத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்," என்று அவர் கூறினார்.
"எதிர்காலத்தில் பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) ஆகிய துறைகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கும் நாங்கள் உதவ விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
மாநிலக் கல்விப் பொறுப்பையும் வகிக்கும் அவர், இந்த ஆண்டு சிலாங்கூர் பல்கலைக்கழகம் (Unisel) மற்றும் சிலாங்கூர் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (UIS) உயர்கல்வியைத் தொடர சுமார் 4,000 சிலாங்கூர் மாணவர்களுக்கு மாநில அரசு நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
"குறைந்த வருமானம் பெறும் (B40) மற்றும் நடுத்தர வருமானம் பெறும் (M40) குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் தேசிய உயர்கல்வி நிதி கழக (PTPTN) கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியத்தைக் குறைக்க உதவுகிறது," என்று அவர் விளக்கினார்.


