குறுகிய இனவாத அரசியலை நிராகரிக்குமாறு சிலாங்கூர் மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு

17 ஜனவரி 2026, 4:57 PM
குறுகிய இனவாத அரசியலை நிராகரிக்குமாறு சிலாங்கூர் மக்களுக்கு மந்திரி புசார் அழைப்பு

அம்பாங் ஜெயா, ஜனவரி 17- அண்மைக்காலமாக சில தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறுகிய இனவாத அரசியலை சிலாங்கூர் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகைய அரசியல் அணுகுமுறையினால் ஏற்படும் மோதல்கள், அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் சமூகத்திற்கு எந்த நன்மையும் தராது என்று அமிருடின் வலியுறுத்தினார். "சமீபகாலமாக மதம் மற்றும் இன அடிப்படையில் நம்மைப் பிரிக்க முயற்சிக்கும் குறுகிய அரசியல் சூழல் நிலவுகிறது. அரசியலமைப்பில் அனைத்தும் தெளிவாக இருந்தபோதிலும், பொறுப்பற்ற சிலர் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மைப் பிரிக்க முயல்கின்றனர்.

"இந்த மாநிலம் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைதியாகவும் சுபிட்சமாகவும் இயங்கி வருகிறது. இத்தகைய தீவிரப்போக்கு கொண்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தற்காலிக ஆதாயத்திற்காக மட்டுமே இவ்வாறு செய்கிறார்கள், ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் ஒற்றுமை முழக்கங்களை எழுப்புவார்கள்," என்று அவர் இங்குள்ள டத்தோ அகமட் ரசாலி மண்டபத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி நவில்தலையும் அங்கீகாரத்தையும் பறைசாற்றும் பொங்கல் கொண்டாட்டமானது, நாட்டின் வருவாயை மக்களுக்கே திருப்பி வழங்கும் மடாணி அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு ஏற்ப அமைந்துள்ளதாக அமிருடின் குறிப்பிட்டார். எண்ணெய் மானிய அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள், நாட்டின் தற்போதைய நிர்வாகம் திறம்பட செயல்படுவதையும் நேர்மறையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வதையும் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், அம்பாங்கில் முதன்முறையாக நடைபெற்ற இந்த மாநில அளவிலான பொங்கல் விழாவில் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டது தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.

"நாங்கள் 1,000 முதல் 2,000 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம், ஆனால் இன்று பேராக் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து திரளாகக் கலந்து கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார். அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழ் நாள்காட்டியின்படி தை மாதத்தின் முதல் நாளில் தொடங்கி நான்கு நாட்களுக்கு இந்திய சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.