ஒற்றுமை உணர்வுடன் சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

17 ஜனவரி 2026, 9:09 AM
ஒற்றுமை உணர்வுடன் சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
ஒற்றுமை உணர்வுடன் சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
ஒற்றுமை உணர்வுடன் சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

அம்பாங், ஜனவரி 17 – 2026-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா, இன்று காலை 8.00 மணி முதல் அம்பாங், தாசேக் பெர்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் ஒற்றுமை உணர்வுடனும் சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

அம்பாங் வாழ் மக்களுடன் இணைந்து நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இது சிலாங்கூர் மாநிலத்தின் பல்லின மக்களிடையே நிலவும் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் இன்றைய பகல் நேர நிகழ்வுகளில் இந்தியச் சமூகத்தின் பாரம்பரியக் கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் குறிப்பாக தோரணம் மற்றும் தென்னை ஓலை பின்னுதல், பூ கட்டுதல் மற்றும் பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி, வண்ணமயமான கோலப் போட்டி, சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான இசை நாற்காலி மற்றும் பாரம்பரிய ‘உறியடி’ போட்டி போன்றவை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அங்கிருந்த பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விழாவிற்கு மேலும் மெரு கேற்றின.

இந்நிகழ்வில் தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. இயூ ஜியா ஹாவூர், லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு. சையத் அஹ்மத் மற்றும் அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்தின் (MPAJ) துணைத் தலைவர் திரு. டி.எஸ். ஹாஜி ஹஸ்ரோல்நிசாம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் கலந்துரையாடி, பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். நகராட்சி மன்ற உறுப்பினர்களும் சமுதாயத் தலைவர்களும் இந்த ஒருங்கிணைப்புப் பணிகளில் முக்கியப் பங்காற்றினர்.

 இந்த விழாவை எவ்வித தடையுமின்றி மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற செயற்குழுவினருக்குப் பாப்பாராய்டு தனது பாராட்டுக்களையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார். இந்திய பாரம்பரியத்தின் தனித்துவத்தைப் போற்றுவதோடு, இளைய தலைமுறையினருக்கு நமது கலாச்சார விழுமியங்களை கொண்டு சேர்க்க இது ஒரு சிறந்த தளமாக அமைந்ததாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து இன்று இரவு, அம்பாங் டத்தோ அஹ்மத் ரசாலி மண்டபத்தில் இவ்விழாவின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அம்பாங் மற்றும் சிலாங்கூர் மாநில மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.