கோலாலம்பூர், ஜனவரி 16 — 16 வது பொதுத் தேர்தலுக்குப் (ஜிஇ16) பின்னர் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்தும் என்று கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமது சாஹிட் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு அம்னோ சிறப்புப் பொதுக் கூட்டத்தில் கட்சி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப் பட்டதால் இது சாத்தியமாகும் என்றார் அவர்.
"பொதுத் தேர்தல் முடியும் வரை நாங்கள் காத்திருப்போம். எங்களுக்கு 18 மாத காலம் உள்ளது, அம்னோ அரசியலமைப்பு திருத்தப்பட்டது; தேர்தல் ஆண்டு முடிவிலிருந்து 18 மாதங்களுக்கு அல்லது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, எது முன்னதாக வந்தாலும் (தேர்தலை) நடத்த முடியும்," என்று துணைப் பிரதமருமான சாஹிட் ஹமிடி கூறினார்.
இங்கு நடைபெற்ற அக்ரோகமாடிட்டி, வுமன் இன் ஹலால் இண்டஸ்ட்ரி எக்ஸ்போ நிகழ்வின் போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்த பரிமாற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.கடைசியாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்னோ தேர்தலில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன.



