ஷா ஆலம், ஜனவரி 16: பத்துமலையில் மின் படிக்கட்டு அமைக்கும் திட்டம் உள்ளிட்ட வணிக நோக்கங்களுக்கான தற்காலிக ஆக்கிரமிப்பு உரிம (TOL) விண்ணப்பத்தை நிராகரிக்கும் சிலாங்கூர் மாநில அரசின் முடிவு, அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி எடுக்கப்பட்டதாகும்.
அனைத்து முடிவுகளும் தேசிய நில சட்டத்தின் கீழ் உள்ள நில ஒழுங்குமுறைகளை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டதாகத் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்துறை கான மாநில நிர்வாக குழு உறுப்பினர் (EXCO) வி. பாப்பா ராய்டு தெரிவித்தார்.
“எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சில தரப்பினர் தாக்கல் செய்ய விரும்பும் நீதிமன்ற நடவடிக்கைகளை நாங்கள் தடுக்கவில்லை. மாறாக, அனைத்தையும் நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். அதே வேளையில், தைப்பூசத் திருவிழா நெருங்கி வருவதால், இந்தப் பிரச்சனையை மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை. அனைத்து முரண்பாடுகளையும் நிறுத்திவிட்டு, நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருப்போம்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல விரும்பும் தரப்பினருக்கு எதிராக தங்கள் தரப்பு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும், மேலும் இது குறித்து விரிவாகப் பேசத் தயாராக இருப்பதாக பாப்பா ராய்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகில வாணி வடிவேலு தெரிவித்தார்.
"எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தலின்படி, இந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; இதை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை," என்று அவர் கூறினார். பத்து மலைப் பகுதியில் எஸ்கலேட்டர் மற்றும் அது தொடர்பான மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்டவில்லை என அண்மையில் டான் ஸ்ரீ நடராஜா முன்வைத்த குற்றச்சாட்டை பாப்பா ராய்டு கடந்த வாரம் மறுத்திருந்தார்.
அக்கருத்து துல்லியமற்ற என்றும், தவறாக வழிநடத்தக் கூடியது என்று குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தைக் கையாள்வதில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் உண்மையான முயற்சியைப் பிரதிபலிக்கவில்லை என்றும் விளக்கினார். முன்னதாக, 2025 பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழு (MMKN) கூட்டத்தின் முடிவை ஆய்வு செய்த பின்னர், ஒரு தனி நபரின் பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சிலாங்கூர் அரசு நிராகரித்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பம் எந்த ஒரு சங்கப் பதிவும் இல்லாமல் தனிநபர் பெயரில் சமர்ப்பிக்கப் பட்டதால், அது தேசிய நிலச் சட்டத்தின் விதிகளுக்கு முரணாக அமைந்ததே இந்த நிராகரிப்புக்கு காரணமாகும்.



