ஷா ஆலாம், 16 ஜனவரி: 2026-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில், கல்வி அமைச்சு மற்றும் யாயாசான் சிலாங்கூர் சிறப்பு கல்வித் திட்டத்தில் பங்கேற்க சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த 496 முதலாம் படிவம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வித் திணைக்களத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீடு மற்றும் மூலோபாய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் முழுவதும் உள்ள 28 நிதியுதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக யாயாசான் சிலங்கூர் கூறியுள்ளது . 2025 செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 15 வரை மொத்தம் 3,184 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 10 முதல் 31 வரை வெளியிடப்பட்டன.
இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்கள் அனைவரும் RM2,000-க்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், இவர்கள் தங்களின் ஆறாம் ஆண்டு வகுப்பறை மதிப்பீட்டில் (PBD) அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் TP3 தரநிலையைப் பெற்றுள்ளனர் என்று அந்த அறவாரியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1971-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தச் சிறப்புத் திட்டம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. மலேசியக் கல்வி அமைச்சின் விதிமுறைகளுக்கு இணங்க, இம்மாணவர்கள் விடுதி வசதி, கல்வி உதவித்தொகை (Biasiswa), வழிகாட்டுதல் வகுப்புகள், கல்விச் சிறப்புத் திட்டங்கள், சுய மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற சலுகைகளைப் பெறுவார்கள்
கிள்ளான் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய இடங்களில் உள்ள சிலாங்கூர் அறவாரிய விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்கானப் பதிவு நடவடிக்கைகள் கடந்த ஜனவரி 9 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடைபெற்றன. மேலும், மாணவர்களின் கல்விச் சாதனை மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கில், நிதியுதவி பெறும் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஒருங்கிணைப்பு ஆசிரியரை (Guru Penyelaras) சிலாங்கூர் அறவாரியம் நியமித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


