ஷா ஆலாம், 16 ஜனவரி: பண்டன் இண்டா மற்றும் அம்பாங் ஜெயா சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது வாகன நிறுத்துமிடங்களை அனுமதியின்றி பயன்படுத்திய மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த வாகனப் பழுது பார்க்கும் நிலையங்களுக்கு எதிராக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி 11 அபராதங்கள் விதிக்கப்பட்டன.
பொதுமக்களின் வாகன நிறுத்துமிடங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக இந்த அதிரடி அமலாக்க நடவடிக்கையை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் மேற்கொண்டது.
2025 ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து வாகன பழுது பார்க்கும் நிலையங்கள், வாகன கழுவும் மையங்கள் மற்றும் வாகன உபரிபாகக் கடைகள் ஆகியவை தங்களது வணிக வளாகத்திற்கு முன்னால் உள்ள இரண்டு அல்லது மூன்று வாகன நிறுத்துமிடங்களை முறையாக வாடகைக்கு எடுப்பது கட்டாயமாக்கப் பட்டதாக நினைவூட்டியுள்ளது. இந்தப் புதிய விதி முறையானது அப்பகுதிகளில் உள்ள இடவசதியை பொறுத்து அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், வாகனங்களை முறையாக வரிசைப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நகராட்சி விளக்கியுள்ளது. மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களை பொதுமக்கள் SISPAA இணையதளம் அல்லது 1-800-22-8100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாகத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது


