ஷா ஆலம், ஜன 16 — சிலாங்கூர் மாநிலத்தில் முந்தைய ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் டிங்கி வழக்குகள் 61 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளன.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சிகளை, இந்த சரிவுக்குக் காரணமாகும்.
தொற்றுநோயியல் வாரம் (EW) 1/2025 முதல் EW 53/2025 வரை சிலாங்கூரில் ஒட்டுமொத்தமாக 23,565 டிங்கி வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதே காலக்கட்டத்தில் 2024ஆம் ஆண்டில் 60,364 வழக்குகள் பதிவாகியிருந்ததாகப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாநிலஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
டிங்கினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் 16 வழக்குகளில் இருந்து ஒன்பதாகக் குறைந்துள்ளது.
"இது குறிப்பாக சிலாங்கூர் சுகாதாரத் துறை (JKNS), ஊராட்சி மன்றங்கள், பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து மேற்கொண்ட மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் வெற்றியாகும்.
"இருப்பினும், இந்த முயற்சிகளை பருவகால அடிப்படையில் செய்ய முடியாது. "தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் டிங்கி வழக்குகளின் சரிவு போக்கைப் பராமரிக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது," என அவர் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.
தேசிய அளவில், கடந்த ஆண்டு டிங்கி பாதிப்புகளில் அதிக சதவீதம் குறைந்து சிலாங்கூர் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாகவும், பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகியவை முறையே 73 சதவீதம் மற்றும் 70 சதவீதம் சரிவைப் பதிவு செய்ததாகவும் ஜமாலியா கூறினார்.
டிங்கி தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக, மாநில அரசு 2026 சிலாங்கூர் பட்ஜெட்டில் RM4 மில்லியனை ஒதுக்கியுள்ளது.


