கோலாலம்பூர், ஜன 15 - பொங்கல் திருநாள் உழைப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் திருநாளாகும். இந்த நாள் கடின உழைப்பு, பரஸ்பர மரியாதை குடும்பம் மற்றும் சமுதாய ஒற்றுமை போன்ற நல்ல பண்புகளையும் பிரதிபலிக்கிறது என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்த வருடம் அனைவரும் நல்ல ஆரோக்கியம், வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பொங்கல் திருநாள், இன ஒற்றுமையை வலுப்படுத்தும் வாய்ப்பையும், சமூகங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதுவே, இன மற்றும் மத பேதங்களைத் தாண்டி சமூகங்களுக்கிடையிலான நட்பையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வாய்ப்பாகவும், மலேசியாவின் பன்முக சமூகத்தின் உண்மையான வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது.
மலேசியா மடாணி கொள்கை வலியுறுத்தும் அரவணைப்பு, நீதி மற்றும் மக்கள் நலன் போன்ற அடிப்படை பண்புகளுடன் இது ஒத்துப் போகிறது என்றார் அவர்.



