புத்ராஜெயா, ஜன 15 - தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டையின் வடிவமைப்பு படங்கள் பொய்யானவை என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அந்த படங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லை என்றும் அத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டையின் தொடர்பான உண்மையான தகவல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அமைச்சின் அதிகாரப்பூர்வ ஊடகத் தளங்கள் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 8ஆம் தேதி, இந்த ஆண்டில் புதிய கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படும் திட்டம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் அறிவித்திருந்தார்.
எனவே, புதிய கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டை தொடர்பான சரியான மற்றும் நம்பகமான தகவல்களுக்காக உள்துறை அமைச்சு, குடியேற்றத் துறை மற்றும் தேசிய பதிவுத்துறை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


