கோலாலம்பூர், ஜன 15 — தேசிய ஒற்றுமையின் அடித்தளமான பரஸ்பர புரிதலும் மரியாதையும் காக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியர்களை கேட்டுக் கொண்டார்.
கருத்துகள், பின்னணிகள் அல்லது நம்பிக்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், அமைதியான மற்றும் செழிப்பான நாட்டை உருவாக்க ஒன்றிணைந்திருக்கும் மனப்பாங்கு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தமிழர்களுக்கு வழங்கிய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
“பொங்கல் திருநாளை குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் இணைந்து மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். இந்த திருநாள் நன்றி உணர்வு, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற மதிப்புகளை நினைவூட்டுகிறது,” என்று அவர் முகநூல் பதிவில் கூறினார்.
பொங்கல் என்பது செழுமையான அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் திருநாளாக மட்டுமன்றி, தமிழ் நாள்காட்டியில் ‘தை’ மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருநாள், முதலில் போகியுடன் தொடங்கி, அதன் பின்னர் சூரிய தேவனுக்கு இனிப்பான பொங்கல் படைக்கும் தை பொங்கல், கால்நடைகளை போற்றும் மாட்டுப் பொங்கல் மற்றும் குடும்ப சந்திப்புகளுக்கான காணும் பொங்கல் ஆகியவற்றுடன் நிறைவு பெறுகிறது.



