தமிழர்களின் மரபு மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் பொங்கல் திருநாள்

15 ஜனவரி 2026, 1:25 AM
தமிழர்களின் மரபு மற்றும் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் பொங்கல் திருநாள்

ஷா ஆலம், ஜன 15 - இயற்கையை போற்றும் பொங்கல் திருநாள் தமிழர்களால் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும். தமிழர்களின் மரபு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

விவசாயத்தோடு நேரடி தொடர்பு மலேசியாவில் குறைவாக இருந்தாலும், தமிழர்களின் பண்பாட்டை விட்டுகொடுக்காமல் அவற்றை பறைசாற்றும் விதமாகப் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.

நம் நாட்டில் பொங்கல் திருநாள் சமூகத்தை தாண்டிய ஒரு விழாவாகும், காரணம் இங்கு பல இன மக்களும் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நம் நாட்டில் பல இன மக்களுக்கு நமது கலாச்சாரத்தை கொண்டு சேர்க்கும் பாலமாகவும் பொங்கல் விழா அமைகிறது என்றால் அதில் ஐயமில்லை.

இதற்கிடையில், வேலை பளு அதிகம் உள்ள இக்காலக்கட்டத்தில், பொங்கலை குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டாடும் போது குடும்ப ஒற்றுமையும் வலுப்படுகிறது என்றார் அவர்.

ஆண்டுதோறும் நம் நாட்டில் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பொங்கல் சார்ந்த பல நிகழ்வுகளை மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது. அதில் பொங்கல் சார்ந்து அறிவிப்புகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதும் அடங்கும்.

அதுமட்டுமில்லாமல், மாநில மற்றும் வட்டார அளவில் சிறந்த முறையில் பொங்கல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதை மலேசிய இந்து சங்கம் ஊக்குவித்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், இளைய சமுகத்தினருக்கு பொங்கல் குறித்த முக்கியத்துவத்தை உணர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலும் பொங்கல் விழாக்களில் உரி அடிப்பது, வழுக்கு மரம் ஏறுதல், கரும்பு சாப்பிடுதல், கோலம் வரைதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும். இவை அனைத்தும் நமது பாரம்பரியத்தைக் கட்டி காக்க உதவுகின்றன.

மலேசியாவில் தேசிய ஒருமைபாட்டை பிரதிபலிக்கு நிகழ்வாகக் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழாவை தமிழர்கள் பிற இனத்தவருடன் இணைந்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடுமாறு தங்க கணேசன் கேட்டு கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.